Saturday, June 1, 2013

விண்ணையும் தாண்டி சினிமாவா... San Diego Show on April 28, 2013 - Writeup in Thendral



சாண்டியேகோவில் ‘விண்ணையும் தாண்டி சினிமாவா…’ நாடகம்
ஜெயபாண்டியன் கோட்டாளம்
ஒளிப்படங்கள்: ஸ்ரீனிவாசன் சதாசிவம்

சாண்டியேகோ தமிழ்ச் சங்கத்தினர் ஏப்ரல் 28 ஞாயிறன்று டெல் நார்ட்டே உயர்நிலைப் பள்ளியில்  தமிழ்ப் புத்தாண்டு நாளைக் கொண்டாடினர். அப்போது தமிழ் மொழித் தேர்வுகள் எழுதிய குழந்தைகளும், பொங்கல் விழாவின்போது கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற குழந்தைகளும் சான்றிதழ்கள் பெற்றனர். சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, சாக்ரமெண்டோ நகரத்தைச் சார்ந்த 'அடடே கிரியேஷன்ஸ்' நாடகக் குழுவினர் 'விண்ணையும் தாண்டி சினிமாவா…' என்ற நாடகத்தை  அரங்கிட்டனர். தமிழ்ச் சங்க உறுப்பினர்களும் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் ஏனைய தமிழர்களும் வருகை தந்து நாடகத்தைக் கண்டு மகிழ்ந்தனர்.

விண்ணகத்தில் சில பகுதிகளும் பூவுலகில் மற்றப் பகுதிகளும் நடப்பதாக இந் நாடகத்தின் கதையமைப்பு வடிவமைக்கப் பட்டிருந்தது. தேவேந்திரன், எமன், குபேரன் போன்ற கடவுளர்களும், சினிமா இயக்குநர், குத்துப் பாடலாசிரியர், கூத்துக் கலைஞர் போன்ற மனிதர்களும் நாடகப் பாத்திரங்களாக அமைந்திருந்தனர். தற்காலக் கொச்சைத் தமிழி(ஷி)ல் பேசும் மனிதர்களுடன் காலத்தை வென்ற தேவர்கள் செந்தமிழிலில் பேசியது பல சிரிப்புச் சூழல்களை உருவாக்கிக் கொடுத்தது. ஒரு தெய்வமகள் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டதும் அதைத் தொடர்ந்த சம்பவங்களும் சிரிப்பூட்டுவனவாக அமைந்தன. கடவுளர் தற்கால மனித உடைகளை அணிந்து வருவதும் மனிதர் கடவுளர் உடைகளை அணிந்து வருவதும் ஒரு வகைச் சிரிப்பு. கடவுளர் கலிபோர்னியாவிலுள்ள ஒரு வீட்டுக்கு விருந்தினராக வருவதும், ஒரு மனிதன் தேவருலகில் அரசாள முற்படுவதும் மற்றொரு வகைச் சிரிப்பு.

ஒரு முழு நாடகத்தை எழுதுவது மிகவும் கடினமான செயல் என்றும், நகைச்சுவை நாடகத்தை எழுதுவது  அதைவிடக் கடினம் என்றும் தமிழ்ச் சங்கத் தொண்டர் பன்னீர்செல்வம் தன் முன்னுரையில் கூறினார். அப்படியானால் நாடகத்தை எழுதியது மட்டுமல்லாமல், பல்வேறு கலைஞர்கள் ஒன்றிணைந்து, பலமுறை ஒத்திகை பார்த்து, வேறொரு ஊருக்குப் பயணம் செய்து, அங்கு அந்நாடகத்தை அரங்கிடுவது மேலும் எவ்வளவு கடினமானது என்பதை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். மேடையில் தோன்றுபவர்கள் மட்டுமல்லாமல், இசை, விளக்கு, திரை, உடை, ஒப்பனை போன்ற பின்னணி வேலைகளில் பங்கேற்ற ஒவ்வொருவரும் வெவ்வேறு துறைகளில் முழுநேரப் பணியாற்றுபவராக இருந்தும், தமிழ் மீதுள்ள அளவிலா ஆர்வத்தால் இவ்வளவு முயற்சியும் நேரமும் செலவிட்டு இந்நிகழ்ச்சியைச் செயற்படுத்தியது மிகவும் பாராட்டத் தக்கது.

இந்நாடகத்தில் நடித்தவர்கள் தொழிலரல்லாத பொழுதுபோக்கரே என்பதைச் சிலநேரங்களில் நாம் மறந்துவிடுமளவுக்குச் சிறப்பாக நடித்தனர். சினிமா நடிகை வேடந்தாங்கிய ஸ்ரவந்தி அரங்க முன்னிலையுடனும் (stage presence), தாளத்துடன் இயைந்த நேரவுணர்வுடனும் (sense of timing) நடித்தார். தந்தையுடன் கோபித்துக் காலுதைத்து அவசரமாக வணக்கஞ் செலுத்திச் சென்றது மிக அருமை. குத்துப்பாடலாசிரியராக முருகேஷ் தோன்றிய போதெல்லாம் அரங்கத்தில் சிரிப்பலை. கொம்பர்களாக  ராம்ராஜும், பாலாவும், எமதர்மராக ஹரியும் சிறப்பாக நடித்திருந்தனர்.  கிண்டல் கொப்பளிக்க வசனம் பேசும் நாரதராக மூர்த்தியும் திரைப்பட பாடல் கேட்டு கடுப்பாகும் இந்திரனாக சுந்தரும், குபேரனாக வெங்கட்டும் நடிப்பிலும் வசன உச்சரிப்பிலும் படு துல்லியம். சித்ரகுப்தராகவும், டூப் போட சொல்லும் ஹீரோவாகவும் இரு வேடங்களில் நடித்த சாம் ஜோர். கணீர் என்ற குரலில் பேசி நடித்த, டைரக்டராக ரமேஷும் கூத்து கோமளவல்லியாக ஜெயந்தியும் பிரமாதம். நிகொம்பனாகவும் அமெரிக்கவாழ் தமிழனாகவும் வித்தியாசம் காட்டி நடித்தார் ராம்ராஜ். ஒரே காட்சியில் நடித்தாலும் தங்கமணியாக அனுப்ரியாவும் நிருபராக ஸ்ரீதரும் சிறப்பாக செய்தனர். திரைக்குப்-பின் ஒருங்கிணைப்பிலும் இவர்கள் இருவரின் பங்களிப்பு முக்கியமானது.

இந்நாடகத்தை எழுதி இயக்கியது ஜெயந்தி ஸ்ரீதர். தமிழில் இலக்கணப் பிழைகளும் உச்சரிப்புக் குறைபாடுகளும் நிறைந்துள்ள இக்காலத்தில் செந்தமிழ் உரையாடல்களை ஜெயந்தி ஸ்ரீதர் இந்நாடகத்தில் அமைத்துள்ளது ஒரு தனிச்சிறப்பு. தமிழில் உயர்தர உரைநடை எழுதுவோரும் பேசுவோரும் உள்ளனர் என்பதைக் காணும்போது 'தமிழ் இனி மெல்லப் பிழைத்தெழும்' என்ற புத்துணர்ச்சி நமக்கு உண்டாகிறது.